search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்திரா பானர்ஜி"

    சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக இருக்கும் இந்திரா பானர்ஜியை, சுப்ரிம் கோர்ட் நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் அனுப்பிய பரிந்துரைக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. #IndiraBanerjee #SupremeCourt
    புதுடெல்லி :

    சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, ஒரிசா ஐகோர்ட் தலைமை நீதிபதி வினீர் சரண் ஆகியோருடன் உத்ரகாண்ட் ஐகோர்ட் தலைமை நீதிபதி கே.எம் ஜோசப் பெயரை மீண்டும் கொலிஜியம் மத்திய அரசுக்கு சமீபத்தில் பரிந்துரை செய்தது. கொலிஜியத்தின் பரிந்துரை அனைத்தையும் மத்திய சட்ட அமைச்சகம் மற்றும் பிரதமர் அலுவலகம் ஏற்றுக்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

    இதற்கான உத்தரவு திங்கட்கிழமை பிறப்பிக்கப்படும் என தெரிகிறது. புதிதாக நியமிக்கப்பட்டவர்களோடு சேர்த்து சுப்ரிம் கோர்ட் நீதிபதிகளின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது. இந்திரா பானர்ஜி நியமனத்தால் சுப்ரிம் கோர்ட்டில் உள்ள பெண் நீதிபதிகளின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. ஏற்கனவே பானுமதி மற்றும் இந்து மல்கோத்ரா ஆகிய பெண் நீதிபதிகள் சுப்ரிம் கோர்ட் நீதிபதிகளாக பதவி வகிக்கின்றனர். எனினும், 6 நீதிபதிகள் பணியிடங்கள் அங்கு இன்னும் காலியாக உள்ளன. 

    கடந்த 2002-ம் ஆண்டு கொல்கத்தா ஐகோர்ட் நீதிபதியாக நியமிக்கப்பட்ட இந்திரா பானர்ஜி, பின்னர் டெல்லி ஐகோர்ட் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். தொடர்ந்து, கடந்த 2017-ம் ஆண்டு சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக அவர் நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. #IndiraBanerjee #SupremeCourt
    தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக மதுரை கிளையில் தொடரப்பட்ட அனைத்து வழக்குகளும் சென்னை ஐகோர்ட்டுக்கு மாற்றப்பட்டுள்ளது. #ThoothukudiShooting
    சென்னை:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

    இந்நிலையில், இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் சிபிஐ விசாரணை கோருவது, ஒருநபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டதற்கு எதிராக என பல வழக்குகள் சென்னை ஐகோர்ட் மதுரை கிளையில் தொடரப்பட்டன. இந்த வழக்குகள் விசாரிக்கப்பட்டு இடைக்கால உத்தரவுகளும் வழங்கப்பட்டுள்ளன.



    இந்நிலையில், அனைத்து வழக்குகளையும் ஒரே இடத்தில் விசாரிக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, அனைத்து வழக்குகளையும் சென்னைக்கு மாற்ற உத்தரவிட்டார்.

    மேலும், துப்பாக்கிச்சூடு தொடர்பான வழக்குகள் அனைத்தையும் ஜூலை 2-ம் தேதி பிற்பகலில் பட்டியலிட வேண்டும் என ஐகோர்ட் பதிவாளருக்கும் தலைமை நீதிபதி உத்தரவிட்டார்.
    தீர்ப்பின் அடிப்படையில் வரும் விமர்சனங்களை தாங்கக்கூடிய மனநிலையில் நீதிபதிகள் இருக்க வேண்டும் என்று தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி கூறினார்.
    சென்னை:

    சைதை துரைசாமியின் மனிதநேயம் மையம் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., சிவில் நீதிபதிகள் பதவிகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகளை நடத்திவருகிறது.

    தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) சிவில் நீதிபதிகள் பதவிக்கான தேர்வை வருகிற 9-ந்தேதி நடத்துகிறது. இந்த தேர்வில் கலந்துகொள்பவர்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகளை சைதை துரைசாமியின் மனிதநேய மையம் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில், பெண் வக்கீல்கள் சங்கத்துடன் இணைந்து நடத்தியது. இந்த பயிற்சி வகுப்பு நேற்றுடன் முடிவடைந்தது.

    இந்த பயிற்சி நிறைவு விழாவில் ஐகோர்ட்டு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அவர் பேசியதாவது:-

    நான் 16 ஆண்டுகளுக்கு மேலாக நீதிபதி பதவி வகிக்கிறேன். நான் சிறந்த தீர்ப்பு வழங்கினேன் என்றால் அது என்னுடைய தீர்ப்பு என்று மட்டும் சொல்லமுடியாது. அந்த வழக்கில் ஆஜரான வக்கீல்களின் திறமையான வாதமும் காரணம் என்று கூறவேண்டும். வக்கீல்கள் பல தரப்பட்ட தீர்ப்புகளின் விவரங்களையும், சட்டங்களை எடுத்துரைத்து சிறப்பாக வாதம் செய்தால்தான் சிறப்பான தீர்ப்பை ஒரு நீதிபதியால் பிறப்பிக்க முடியும்.

    நீதிபதிகள் தங்கள் தீர்ப்புகளின் மூலமாக பேசவேண்டும். தீர்ப்புகள் தான் நீதிபதிகளை எடைபோடும். நீதிபதிகள் அளிக்கும் தீர்ப்புகளை பார்க்கும்போது, நீதி வழங்கப்பட்டுள்ளது என்பது முழுமையாக தெரியவேண்டும். நீதிபதியாக அமர்ந்துவிட்டாலே யாருக்கும் ஆதரவாகவோ, சாதகமாகவோ செயல்படக்கூடாது. ஒரு தீர்ப்பின் அடிப்படையில் வரும் விமர்சனங்களை தாங்கக்கூடிய மனநிலையில் நீதிபதிகள் இருக்கவேண்டும். விமர்சனங்களை தாங்கக்கூடிய பாறைகளாக இருக்க வேண்டும்.

    இவ்வாறு தலைமை நீதிபதி பேசினார்.

    நிகழ்ச்சியில் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜிக்கு, சைதை துரைசாமியின் மனிதநேயம் மையத்தின் நிர்வாக அறங்காவலர் வெற்றி துரைசாமி நினைவு பரிசு வழங்கினார்.

    இயக்குனர் எம்.கார்த்திகேயன், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் செயலாளர் ராஜகுமார் உள்பட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். 
    ×